சென்னை அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல் முன்பு சாலை அடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

சென்னை அண்ணாசாலை மூடப்பட்டது- போக்குவரத்து போலீசார் அதிரடி

ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுத்ததால் சென்னை அண்ணாசாலையை போக்குவரத்து போலீசார் நேற்று மதியம் மூடினர்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் சென்னை மாநகரில் வாகனங்கள் பரபரப்புடன் இயங்கி வருகின்றன. உங்கள் வீடு தேடி காய்கறிகள் வரும். உங்கள் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என்று போலீசார் எவ்வளவோ எடுத்து சொன்னாலும், காதில் வாங்கி கொள்ளும் மனநிலையில் பலர் இல்லை.

மக்கள் காய்கறிகள், பழங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சிரமப்பட கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், மாநகர பஸ்நிலையங்கள், மைதானங்கள் உள்பட இடங்கள் தற்காலிக சந்தைகளாக உருவாக்கி தரப்பட்டு உள்ளது.

ஆனாலும் ‘அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்கிறோம்’ என்ற போர்வையில் மக்கள் பல கி.மீட்டர் தூரம் பயணிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நேரமான மதியம் 1 மணி முடிந்த பின்னரும் வாகனங்கள் நடமாட்டம் அப்படியே இருக்கிறது.

இந்தநிலையில் ஊரடங்கை மீறி முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுப்பதை தடுக்கும் நடவடிக்கையாக முக்கிய சாலைகளை மதியம் 1 மணிக்கு மேல் மூடுவதற்கு போக்குவரத்து போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ஜெமினி மேம்பாலம் அண்ணாசாலை முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வரையிலான சாலை பகுதிகள் நேற்று மதியம் 1 மணி முதல் தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. பக்கவாட்டு சாலைகளும் அடைக்கப்பட்டன.

அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் செய்வது அறியாமல் தவித்தனர். தடுப்புகளை திறந்துவிடும்படி சிலர் போலீசாரிடம் மன்றாடினார்கள். ஆனால் போலீசார் திறக்க முடியாது. வேறு வழியாக சுற்றி செல்லுங்கள் என்று திட்டவட்டமாக கூறினார். இதையடுத்து வேறு வழியின்றி வாகன ஓட்டிகள் திரும்பி சென்றனர். அதே நேரத்தில் ஆம்புலன்சு உள்பட அத்தியாவசிய வாகனங்கள் செல்வதற்கு மட்டும் போலீசார் வழி ஏற்படுத்தி தந்தனர்.

அண்ணாசாலை நேற்று மதியம் அடைக்கப்பட்டதால் அப்பகுதி ஆள் அரவரம் இன்றி பாலைவனம் போன்று காட்சி அளித்தது.