செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வு

ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஏரிகள் உள்ளன. 

பருவமழை பொய்த்ததால் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு அடியோடு குறைந்தது. இதனால் சென்னை மற்றும்  புறநகர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பரவலாக மழை  பெய்து வருகிறது. 

இதனால் கடந்த ஜூலையில் இருந்து ஏரிகளுக்கு மழை நீர் வரத்து தொடங்கியது. இதன் காரணமாக வறண்டு கிடந்த  பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மெல்ல, மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. தற்போது ஏரியில் 212 மில்லியன் கன அடி  தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 62 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 27 கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது. 

செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 6 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.  

இதே போல் பூண்டி ஏரியில் 26 மி.கன அடியும் (மொத்த கொள்ளளவு 881 மி.கன அடி) புழல் ஏரியில் 113 மி.கன அடியும்  (மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி) நீர் இருப்பு உள்ளது. 2 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து இல்லை. 

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இன்று காலை நிலவரப்படி ஏரியில் 28 மி.கன அடி தண்ணீர்  உள்ளது. நீர் வரத்து இல்லை. ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் சென்னைக்கு  குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.