திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றபோது எடுத்த படம் 
செய்திகள்

சந்திரயான் 2 விண்கலம் - வெற்றிக்கரமாக அமைய திங்களூர் சந்திர பகவானுக்கு சிறப்பு யாகம்

சந்திரயான்-2 விண்கலம் பயணம் வெற்றிக்கரமாக அமைய திங்களூர் சந்திர பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

மாலை மலர்

திருவையாறு:

நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகி விட்டதால் இங்கு மனிதர்கள் வாழும் சூழல் உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க இந்த சந்திரயான்-2 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உலக நாடுகளே இந்த விண்கலத்தின் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன.

உலகிலேயே நிலவின் தென்துருவத்துக்கு விண்கலத்தை செலுத்தும் முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி சந்திரயான் விண்கலத்தின் பயணம் வெற்றிக்கரமாக அமைய வேண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் சந்திர பகவான் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

திருவையாறு அருகே திங்களூர் கிராமம் உள்ளது. இங்குள்ள கைலாசநாதர் கோவிலில் நவக்கிரக ஸ்தலங்களில் சந்திர பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியானது சந்திரனுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. தினமும் சந்திர பகவானுக்கு பூஜைகளும், திங்கள் கிழமை மற்றும் பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

விண்ணில் விண்கலம் ஏவப்படும் போதெல்லாம் இந்த சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்வெளியில் ஏவப்பட்டபோது அதன் பயணம் வெற்றிகரமாக நடைபெற இக்கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடத்தப்பட்டது

இந்த நிலையில் இன்று சந்திரயான்-2 பயணமும் வெற்றிகரமாக நிலவை அடையவும், தடைகள் ஏதும் இல்லாமல் ஆய்வுகள் மேற்கொள்ளவும் இருக்க வேண்டி திங்களூரில் சந்திரன் சன்னதியில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றது. சந்திர பகவானுக்கு மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலேயே திங்களூரில் தான் சந்திரயான்-2 வெற்றி பெற சிறப்பு யாகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.