சந்திரசேகரராவ் 
செய்திகள்

என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை- சந்திரசேகரராவ்

என்னிடம் கூட பிறப்புச் சான்றிதழ் கிடையாது, என் தந்தையின் பிறப்புச் சான்றிதழ் கேட்டால் நான் எங்கு செல்வது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் மக்கள் தொகை பதிவேடு (என்.பி. ஆர்) குறித்து நடந்த விவாதத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வலிமையான தீர்மானம் கொண்டுவந்து நாட்டுக்கு செய்தி சொல்ல வேண்டும்.

என்னிடம் கூட பிறப்புச் சான்றிதழ் கிடையாது. அப்படி இருக்கும் போது நான் எப்படி என் தந்தையின் பிறந்த இடம், பிறந்த தேதியை நான் எப்படி நிரூபிக்க முடியும். எனக்கு கூட என்.பி.ஆரை நினைத்து கவலையாக இருக்கிறது.

நான் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது ஆஸ்பத்திரிகள் கிடையாது. கிராமத்தில் உள்ள பெரியவர்கள் ‘‘ஜமநாமா’’ என்ற பிறப்பு குறித்து எழுதி கொடுப்பார்கள். அதற்கு அரசின் அதிகாரப்பூர்வ முத்திரை இருக்காது.

நான் பிறந்த போது எனது குடும்பத்தில் 580 ஏக்கர் நிலம், கட்டிடம் எல்லாம் இருந்தது. ஆனாலும் என்னால் பிறப்பு சான்றிதழை தர முடிய வில்லை. அப்படி இருக்கும் போது பட்டியலினத்தில் உள்ள மக்கள், பழங்குடியினர், ஏழை மக்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழை எவ்வாறு வழங்கமுடியும்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சிக்கு தனியாக கொள்கைகள், சித்தாந்தங்கள் இருக்கின்றன. அதில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம்.

குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் கவலை அளிக்கக் கூடிய சட்டம் ஆகும். இந்திய அரசியல் அமைப்பின் ஒவ்வொரு பிரிவுக்கும் விரோதமாக இந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அனைத்து மக்களையும் சாதி, மத வேறுபாடின்றி நடத்த வேண்டும் என்பதற்கு எதிராக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் ஒதுக்கி வைக்கும் சட்டத்தை எந்த பண்பட்ட சமூகமும் ஏற்க மாட்டார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது நாட்டின் எதிர்காலம், சர்வதேச அளவில் நாட்டின் தோற்றத்தை பிரதிபலிக்கக் கூடியது. இதுபோன்ற சட்டத்தால்தான் ஐ.நா.சபை உள்ளிட்ட உலக அமைப்புகளில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது.

நாங்களும் இந்த நாட்டில் ஒரு அங்கம். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். யாருக்கும் அஞ்சமாட்டோம். குடியுரிமை திருத்த சட்டத்தால் தலைநகர் டெல்லியில் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இது சாதாரண விசயமல்ல. தேசத்தில் இப்போது நடக்கும் இந்த விவாதம் முக்கியமானது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். சட்டசபையிலும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவோம்.

6 மாநிலங்கள் வரை சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்றி உள்ளன. அதுபோல நாங்களும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு சந்திரசேகரராவ் பேசினார்.