செய்திகள்

கமல்ஹாசனுக்கு, சந்திரபாபு நாயுடு நன்றி

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு, “உங்கள் பிறந்த நாளன்று , உங்கள் மாநிலத்தின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்... வழக்கம் போல “இன்று போல என்றும் வாழ்க” என வாழ்த்துவது முறையாகாது. எனினும் நாட்டிற்கு உங்கள் மாநிலம் அளித்த முதலீட்டில், உரிய பங்கைத் திரும்பக் கேட்கும் உங்கள் போராட்டம் வெல்லட்டும்” என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சந்திரபாபு நாயுடு நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் 5 கோடி ஆந்திர மாநில மக்களும் உங்களுக்கு இதன்மூலம் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்து உள்ளார்.  #KamalHaasan