செய்திகள்

பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் பா.ஜ.க. கூட்டணிக்கு முழுக்கு - சந்திரபாபு நாயுடு முடிவு

பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் பா.ஜ.க. கூட்டணிக்கும் முழுக்கு போடும் அறிவிப்பை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிடுவார் என்று தெரிகிறது.

மாலை மலர்

விஜயவாடா:

ஆந்திராவில் இருந்து பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து ஆந்திராவுக்கு உதவும் வகையில் 19 அம்ச மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆந்திரா மாநிலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு சிறப்பு நிதி வழங்குவது ஆகியவை அதில் பிரதானமாக இடம் பெற்றிருந்தது. ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு 25-க்கும் மேற்பட்ட தடவை மத்திய அரசுடன் பேசியும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததை கண்டித்து, மத்திய மந்திரிசபையில் இருந்து வெளியேற சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.

அதன்படி தெலுங்குதேசம் மத்திய மந்திரிகள் அசோக் கஜபதி ராஜு, சுஜனா சவுத்திரி இருவரும் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. மந்திரிகள் மாணிக்கியால ராவ், காமிரேனி சீனிவாஸ் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். அதை சந்திரபாபு நாயுடு உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவை சமரசம் செய்யும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். தொலைபேசியில் அவர் சந்திரபாபு நாயுடுவுடன் பேசினார். ஆனால் அந்த சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசித்து வருகிறார். அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளார்.

தேர்தலின்போது ஆந்திர மாநில மக்களை எதிர்கொள்ள வேண்டுமானால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து உடனே விலக வேண்டும் என்று தெலுங்கு தேசம் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதை ஏற்று கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவு பெறுகிறது. எனவே ஏப்ரல் இரண்டாவது வாரம் பா.ஜ.க. கூட்டணிக்கு நிரந்தரமாக முழுக்கு போடும் அறிவிப்பை சந்திரபாபு நாயுடு வெளியிடுவார் என்று தெரிகிறது.

அதன் பிறகு சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணியில் தீவிரம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. #tamilnews