செய்திகள்

சாம்பியன்ஸ் கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி வெற்றி: ஜடேஜா, தவான் சாதனைகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜடேஜா, தவான் சாதனைகளை பார்க்கலாம்.

மாலை மலர்

* ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். அவர் 9 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த வகையில் 2-வது இடத்தில் ஜாகீர்கான் (9 ஆட்டத்தில் 15 விக்கெட்) இருக்கிறார்.

* இந்த ஆட்டம் இந்திய வீரர் யுவராஜ்சிங்குக்கு 300-வது ஒரு நாள் போட்டியாகும். சச்சின் தெண்டுல்கர் (463), ராகுல் டிராவிட் (344), அசாருதீன் (334), சவுரவ் கங்குலி (311) ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய இந்தியர் யுவராஜ் ஆவார். துரதிர்ஷ்டவசமாக முக்கியமான இந்த ஆட்டத்தில் அவருக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது.

* வங்காளதேசத்துக்கு எதிராக எடுத்த 46 ரன்களையும் சேர்த்து இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் இந்த சாம்பியன்ஸ் கோப்பையில் இதுவரை 317 ரன்கள்(4 ஆட்டம்) குவித்து தங்கபேட் விருது வாய்ப்பில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். அடுத்த இடத்தில் ரோகித்சர்மா (304 ரன்) உள்ளார்.

* சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் ஒட்டுமொத்தத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் (791 ரன்), இலங்கையின் ஜெயவர்த்தனே (742 ரன்), சங்கக்கரா (683 ரன்) ஆகியோருக்கு அடுத்து 4-வது இடத்தை இந்திய வீரர் ஷிகர் தவான் (9 ஆட்டத்தில் 680 ரன்) பிடித்துள்ளார். இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி (11 ஆட்டத்தில் 665 ரன்) 5-வது இடத்தில் உள்ளார்.

* சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப்போட்டியை எட்டுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2000-ம் ஆண்டு (2-வது இடம்), 2002-ம் ஆண்டு (சாம்பியன்), 2013-ம் ஆண்டுகளில் (சாம்பியன்) இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. 4 முறை இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே அணி இந்தியா தான்.