லாகூர் :
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால் அந்த நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது அந்த நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் அமிர் சோகைல் மறைமுகமாக சூதாட்ட குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.
இது குறித்து அமிர் சோகைல் டெலிவிஷன் விவாத நிகழ்ச்சியில் பேசுகையில், ‘பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் பின்னணியில் வெளிப்புற காரணிகள் இருக்கின்றன. பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படாத நிலையில் இந்த முன்னேற்றம் குறித்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம். நீங்கள் (பாகிஸ்தான்) வெற்றி பெறுவதற்கு யாரோ ஒருவர் உதவி செய்து இருக்கிறார்.
இந்த வெற்றியால் நீங்கள் மகிழ்ச்சி அடைய எந்த காரணமும் இல்லை. திரைக்கு பின்னால் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். அந்த விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை’ என்றார். அமிர் சோகைலின் கருத்து பெருத்த சர்ச்சையாக உருவெடுத்ததை தொடர்ந்து அவர் பல்டி அடித்தார். தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் கூறினார்.