தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பந்து கோல் கம்பம் அருகிலேயே சுழன்றது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோலை பதிவு செய்தார். வலது பக்கம் கார்னர் பக்கத்தில் இருந்து பாஸ் செய்த பந்தை ரியல் மாட்ரிட் வீரர் கோல் நோக்கி அடித்தார். பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்தது. அப்போது தயாராக இருந்த பென்சிமா அதை கோலாக மாற்றினார்.
முதல் கோல் அடித்த பின் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினர். என்றாலும் பிஎஸ்ஜி கோல் கீப்பர் சிறப்பான வகையில் தடுத்தார். அதேபோல் ரியல் மாட்ரிக் கோல் கீப்பரும் சிறப்பான வகையில் சில பந்துகளை தடுத்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் நீண்ட நேரம் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் வலது பக்க கார்னர் பகுதியில் இருந்து மார்சிலோ கொடுத்த அருமையான பாஸை தலையால் முட்டி கோலாக்கினார் கரிம் பென்சிமா.