பயிற்சியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 
செய்திகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா நியூசிலாந்து?

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து மல்லுகட்டுகிறது.

மாலை மலர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 2-வது லீக்கில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

2006, 2009-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா கடந்த முறை முதல் சுற்றுடன் வெளியேறியது. மறுபடியும் அரியணை ஏறுவதில் தீவிரம் காட்டும் ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. கேப்டன் ஸ்டீவன் சுமித், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், கிறிஸ்லின், டேவிட் வார்னர் என்று பேட்டிங்கிலும், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பேட்டின்சன், கம்மின்ஸ் என்று பந்து வீச்சிலும் ஆஸ்திரேலியா மிக வலுவாக திகழ்கிறது.

புதிய ஊதிய ஒப்பந்த பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் அதை கிரிக்கெட் வீரர்களின் சங்கம் பார்த்துக் கொள்ளும்; எங்கள் கவனம் எல்லாம் இந்த தொடர் மீதே இருக்கிறது என்று ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். இது போன்ற தொடர் 4 ஆண்டு அல்லது 2 ஆண்டுக்கு ஒரு முறை தான் வருகிறது. அதை வெல்வது மிகவும் முக்கியமானது என்றும் சுமித் குறிப்பிட்டார்.

திடீரென சீறிப்பாயக்கூடிய ஒரு அணியான நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். கடந்த 6 மாதங்களில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை சேப்பல்-ஹாட்லீ கோப்பைக்கான ஒரு நாள் தொடரில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒன்றில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 357 ரன்களை வெற்றிகரமாக துரத்திப்பிடித்தது, நியூசிலாந்துக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 135 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 90-ல் ஆஸ்திரேலியாவும், 39-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. 6 ஆட்டத்தில் முடிவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து ஒரு போதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை. 5 ஆட்டங்களில் மோதி 4-ல் தோற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், ஜான் ஹேஸ்டிங்ஸ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ்.