செயின் பறிப்பு 
செய்திகள்

அலங்காநல்லூரில் போலீஸ்காரர் மனைவியிடம் செயின் பறிப்பு

அலங்காநல்லூரில் கத்தி முனையில் போலீஸ்காரர் மனைவியிடம் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் செயினை பறித்து சென்றார்.

மாலை மலர்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மணியஞ்சி ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் குமார் (வயது 31). திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் காரராக உள்ளார்.

இவரது மனைவி பிரவீனா (27). இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து அலங்காநல்லூர் சென்றுவிட்டு ஆட்டோவில் குமாரம் பிரதான சாலையில் இறங்கி மணியஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது அருகில் இருந்த வாழை தோப்புக்குள் மறைந்திருந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் அவரை வழிமறித்தான். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி பிரவீனா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டான். அவன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவன் என்று தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து பிரவீனா அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய முகமூடி திருடனை தேடி வருகின்றனர்.