பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே தெலுங் கானா மாநிலம் ஐதராபாத்தில் பேட்டி அளித்த பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக போரின் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பிரச்சினைகள் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும், பா.ஜனதாவும் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.