செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு வழங்குகிறது

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளதாக மத்திய மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார்.

சண்டிகர்:

மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் அடையாள அட்டைகள் வழங்குகின்றன. இதை வேறு மாநிலத்தில் பயன்படுத்த முடியாது. இதனால், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு அரசு திட்டங்களின் பலன்கள் மற்றும் ஒதுக்கீடுகளை பெறுவதில் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.

இந்த நிலையை மாற்ற,  நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் தேசிய அடையாள அட்டையை வழங்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேசிய அடையாள அட்டையை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளதாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார்.

அரியானா மாநிலம் ஜாஜர் நகரில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இத்தகவலை தெரிவித்தார்.  மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு,  மாற்றுத் திறனாளிகளுக்காக இந்தியா முழுவதிலும் இதுபோன்று 5500 முகாம்களை நடத்தி, உபகரணங்களை வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

மேலும், ராஞ்சியில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர் பல்ராமை மத்திய மந்திரி பாராட்டி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT