செய்திகள்

ஒக்கி புயல் சேதம் நிலவரம் தொடர்பாக தமிழக முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஒக்கி புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதம் நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

அரபிக்கடலில் உருவான ஒக்கி புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசினார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மேலும் மீனவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் மத்திய அரசு வழங்கும் என்று ராஜ்நாத் உறுதி அளித்தார்.