செய்திகள்

70 தளிர்கள் பலியான கோரக்பூரில் ரூ.85 கோடியில் குழந்தைகள் சிறப்பு மருத்துவ ஆய்வு மையம்: நட்டா அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 70 பச்சிளந் தளிர்கள் பலியான கோரக்பூரில் குழந்தைகளுக்கான நோய் குறியியல்களை கண்டறிய ரூ.85 கோடியில் சிறப்பு மருத்துவ ஆய்வு மையம் அமைக்கப்படும் என மத்திய சுகாரத்துறை மந்திரி நட்டா இன்று அறிவித்துள்ளார்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம், கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கும் காரணம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். மேலும் மருத்துவமனை முதல்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று அங்கு நிலவிவரும் சூழ்நிலை தொடர்பாக ஆய்வு செய்தனர்.

அந்த மருத்துவமனைக்கு புதிய முதல்வர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கோரக்பூரில் குழந்தைகளுக்கான நோய் குறியியல்களை கண்டறிய பிராந்திய அளவில் சிறப்பு மருத்துவ ஆய்வு மையம் அமைப்பதற்காக மத்திய அரசு 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாரத்துறை மந்திரி நட்டா இன்று அறிவித்துள்ளார்.