புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த போதிலும் எதிர்க்கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.
தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.
வேலைநிறுத்த போராட்டத்தால் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
வருமான வரித்துறை, கணக்கு தணிக்கை துறை, தபால் துறை போன்றவற்றில் ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை. சாஸ்திரி பவன், ராஜாஜி பவனில் உள்ள பல்வேறு துறை அலுவலககங்களில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். குறைந்த அளவில் ஊழியர்கள் வந்திருந்தனர்.
சம்பள கணக்கு துறை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கலால், சுங்கவரி உள்ளிட்ட துறைகளிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அதிகாரிகள் சங்கம் சார்பில் துரைப்பாண்டியன் தலைமையில் மதிய உணவு இடைவெளியில் சென்னை கஸ்டம்சில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இன்சூரன்ஸ், பி.எஸ்.என்.எல். ரெயில்வே ஊழியர்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெரம்பூர் லோகோ மெயின் கேட்டில் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரேஜ் ஒர்க்க்ஷாப் அருகில் பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம், நிர்வாக பொதுச் செயலாளர் சூரியபிரகாஷ், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், குருநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. தி.மு.க.வின் எல்.பி.எப், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தையின் தொழிலாளர் முன்னணி மற்றும் ஐ.என்.டி.சி., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். பஸ், ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அண்ணாசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், முழுமையாக பங்கேற்றதால் நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவை நடைபெறவில்லை. கிளை மேலாளர்கள் வங்கியை திறந்து வைத்து இருந்த போதிலும் ஊழியர்கள் பணிக்கு வராததால் பணம் போடவோ, எடுக்கவோ முடியவில்லை. காசோலை பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டன.
சென்னையில் காசோலை பரிவர்த்தனை மையத்தின் வழியாக நடைபெறும் 6500 கோடி மதிப்புள்ள 8 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை ஆகாமல் தேங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டம் குறித்து சி.எச். வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கி, கிராம வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். ஒரு நாள் வேலைநிறுத்தம் மூலமாக சென்னை காசோலை பரிவர்த்தனை நிறுவனத்தின் 8 லட்சம் காசோலைகள் தேங்கி உள்ளன. வங்கிகள் திறந்து இருந்த போதிலும் ஊழியர்கள் இல்லாததால் பணிகள் நடைபெறவில்லை. வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து உள்ள நிலையில் உழைக்கும் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதை விடுத்து தொழிலாளர்களின் உரிமையை பறிப்பது, தொழிலாளர் நல சங்கங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றுவது, வேலையில்லா திண்டாட்டத்தை புறக்கணிப்பது போன்ற தவறான பாதையில் அரசு செல்கிறது.
தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு உற்பத்தியை பெருக்கி நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அரசின் கொள்கை நாட்டின் மக்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவாத கொள்கைகளை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.