தஞ்சாவூர்:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கீழவாசலில் உள்ள தியேட்டர் முன்பு திரண்டு பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் தலைமை தபால் நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சி.ஐ.டி.யூ. ஜெயபால், தொ.மு.ச. சேவியர், ஐ.என்.டி.யூ.சி. மோகன்ராஜ், வங்கி ஊழியர் சங்கம் அன்பழகன், விவசாய சங்கம் பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.