செய்திகள்

தமிழக அரசியல் குழப்பம்: கவர்னர் நடவடிக்கை பாராட்டத்தக்கது - மத்திய மந்திரி பேச்சு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளில் கவர்னர் வித்யாசாகர்ராவ் சிறப்பாக பணியாற்றுகிறார் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று சென்னை வந்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாஜ்பாய் அரசில் மந்திரியாக இருந்த போதும், தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக இருந்த போதும் நான் ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மோடி அரசில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஜெயலலிதா தொலை நோக்கு பார்வையுடன் துணிச்சல்மிக்க தலைவர்.

தமிழ்நாட்டுக்கு அவர் செய்த பணிகள் ஏராளம். அதன் மூலம் தமிழ்நாடு கண்டிப்பாக வளர்ச்சி அடையும், செழிப்படையும். மத்திய அரசு எந்த மாநிலத்தின் உரிமைகளிலும் தலையிடுவது இல்லை. நாடு முழுவதும் 70 சதவீத இடங்களில் பா.ஜனதா ஆட்சி செய்கிறது. எங்களுக்கு 13 முதல்-மந்திரிகளும், 4 துணை முதல்-மந்திரிகளும் உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளில் கவர்னர் வித்யாசாகர்ராவ் சிறப்பாக பணியாற்றுகிறார். தமிழ் நாட்டுக்கு என்று முழு நேர கவர்னரை நியமிக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். ஆனால் வித்யாசாகர்ராவ் தனது பணியை சிறப்பாக ஆற்றி வருகிறார் என்பது எனது கருத்து.

ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சையை கிளப்புவது அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை. அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. ஆனால் அவரது மரணம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது அவர் இறக்க கூடிய வயது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.