செய்திகள்

தமிழ்நாட்டில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய மந்திரி அஸ்வினிகுமார் பேட்டி

தமிழ்நாட்டில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே இன்று சென்னை வந்தார்.

காலை 11 மணி அளவில் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். டெங்கு நோய் பரவுவதை தடுக்க மேற் கொள்ளப்படும் பணிகள் குறித்த அஸ்வினி குமார் டாக்டர்களிடமும், அதிகாரிகளிடமும் விரிவாக ஆலோசனை செய்தார்.

பின்னர் அவர் 2-வது மாடிக்கு சென்று டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

பின்னர் மத்திய இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே நிருபர்களிடம் கூறியதாவது-

டெங்குவுக்கு இதுவரை 40 பேர் தமிழ்நாட்டில் பலியாகி உள்ளனர். பிற காய்ச்சலுக்கு 30 பேர் இறந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மத்திய அரசு எல்லா வகையிலும் தமிழகத்துக்கு உதவியாக இருக்கும்.

தமிழ்நாட்டில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான இடம் 3 மாதத்தில் தேர்வு செய்யப்படும். எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.