செய்திகள்

கர்நாடக குழப்பத்துக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் - அகிலேஷ் யாதவ்

கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். #AkhileshYadav

லக்னோ:

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், ‘இன்று பண அதிகாரத்தை மக்களின் தீர்ப்பு வெற்றி கண்டுள்ளது. பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்தவர்கள், அரசியலை வியாபாரமாக்க விரும்பாதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பாடம் கற்றுள்ளனர்.

எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #KarnatakaCMrace #Centralgovtshouldresign #AkhileshYadav 

SCROLL FOR NEXT