புதுடெல்லி:
இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை சந்தைகளில் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் மாட்டிறைச்சி தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நாளை தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவில் 2-ந்தேதி 2 ஆயிரம் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாடுகளை விற்கும் தடை உத்தரவை எதிர்த்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல மாநிலங்களில் ஆய்வு செய்து வருகின்றன. எனவே வரும் நாட்களில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மாட்டிறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனை மூலம் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு கிடைக்கும் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஒருவர் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்ற கோஷம் அதிகரித்து வருகிறது. எனவே இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை விற்க தடை விதித்துள்ள விவகாரம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. மாடுகளை விற்க தடை விதிக்கும் உத்தரவை கைவிட இந்த அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
அதற்கு பதில் பசுவதையை தடுக்க வேறு சில புதிய சட்ட விதிகளை அறிமுகம் செய்ய இந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளில் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
அனைத்து துறையினர் கருத்துகள் கேட்ட பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான குழு கூடி இதற்கான புதிய விதிகளை அறிவிக்கும் என்று சுற்றுச்சூழல் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்க தடை செய்யும் உத்தரவில் விரைவில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.