சென்னை:
நாடு முழுவதும் போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. தீவிரவதிகளும் போலி சிம்கார்டுகள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இது போன்ற சிம்கார்டுகள் போலி அடையாள அட்டைகளை கொடுத்தே வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை தேடி கண்டுபிடிப்பது போலீசாருக்கு சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு செல்போன் சிம்கார்டுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதன்பின்னர் பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணுடன் ஆதார் எண்களை இணைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிப்ரவரி 18-ந் தேதிக்குள் அணைவரும் ஆதார் எண்களை செல்போன் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆதார் எண்களை இணைப்பதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.