செய்திகள்

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு - மத்திய அரசு ஒப்புதல்

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு கண்டிப்பாக வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றால் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து துறைகளும் அறிவிப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியை  வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார். அவருக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மகப்பேறு விடுப்பு அளிக்க உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பில், 'பெண் ஊழியர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன் மகப்பேறு விடுமுறை வேண்டுமென்றால் ஊழியர்கள் தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும். வாடகைத்தாய் மற்றும் வளர்ப்புத்தாய் இருவரும் அரசு ஊழியர்களாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுப்பு அளிப்பது குறித்த முடிவை எடுப்பார்கள்' என கோர்ட் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது அனுப்பி உள்ள சுற்றறிக்கையுடன், 2015-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகலையும் இணைத்து அனுப்பியுள்ளது.