புதுடெல்லி:
இந்தியாவில் ஒரு மூட்டை சிமெண்ட் சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அருணாசலப்பிரதேச மாநிலத்தின் சங்லாங் மாவட்டத்தில் விஜோய்நகர் கிராமம் உள்ளது. இந்த பகுதி இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சரியான வசதிகள் இல்லாததால் மக்கள் அப்பகுதிகளை விட்டு அருகில் உள்ள நகரங்களில் குடியேறி வருகின்றனர். தற்போது அந்த கிராமத்தில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக விஜோய்நகர் கிராம பகுதியிலும் பொது சுகாதார பொறியியல் துறையினர் வீடுகளுக்கு என தனியாக கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த திட்டத்திற்கு ஒரு வீட்டிற்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரத்து 800 மற்றும் மாநில அரசு 9 ஆயிரத்து 200 என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் மியான்மர் என மூன்று நாடுகளும் சந்திக்கும் சாலை வழியே விஜோய்நகருக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இருப்பினும் 5 நாட்கள் நடந்து 156 கி.மீட்டர் தொலைவை கடந்து நகரிலிருந்து அந்த கிராமத்திற்கு சிமெண்ட் மூட்டை சுமந்து கொண்டுவரப்படுகிறது. அதனால் சுமை தூக்குபவர்கள் ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 8000 ரூபாய் கூலி கேற்கின்றனர்.
இந்த மலை பிரதேச பகுதி வருகிற டிசம்பருக்குள் முழு சுகாதாரம் நிறைந்த பகுதியாக மேம்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.