சென்னை:
சிறைகளில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகளில், ரூ.5.40 கோடி செலவில் ‘ஜாமர்’ கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் செல்போன்களை சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர் என்பது உள்ளிட்ட பல புகார்களுடன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது.
ஏற்கனவே, சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறித்து, தமிழக சிறைத்துறைக்கு நீதிபதி என்.கிருபாகரன் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஐகோர்ட்டில், தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் உள்ள உயர் பாதுகாப்பு பிளாக்குகளில், 12 செல்போன் ‘ஜாமர்’ கருவிகளை பொருத்துவதற்கு, தமிழக அரசு ரூ.5.40 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்படி 9 மத்திய சிறைகளுக்கும், ‘ஜாமர்’ கருவிகள் வழங்கப்பட்டுவிட்டன.
புழல் மற்றும் வேலூர் சிறைகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு விட்டன. பிற சிறைகளில் ‘ஜாமர்’ கருவி பொருத்தும் பணி விரைவில் முடிந்து விடும். கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது. சிறைகளில் கூடுதலாக மேலும் 2 ‘ஜாமர்’ கருவிகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க, அவ்வப்போது ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றத்தை சிறைக்குள் நடத்துகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2 ஆயிரத்து 606 சிறு வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,384 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.