செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 72-வது பிறந்தநாள்: பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரசின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். உடல் நிலை சரியில்லாத நிலையில் அவரது மகனும், காங்கிரசின் துணை தலைவருமான ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் 1946-ம் ஆண்டு இதே தினத்தில் இத்தாலியில் உள்ள லுசியானாவில் பிறந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிந்தனர்.

அலுவலகத்தின் முன்னால் அவர்கள் பட்டாசு வெடித்து தங்கள் தலைவியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மேலும், அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். 

பிறந்தநாள் காணும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.