திருப்பூர்:
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் தருணத்தில் சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நமது கடமையாகும்.
அந்த வகையில் நாளை 4-ந்தேதி (திங்கட்கிழமை) சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 118-வது பிறந்தநாளையொட்டி திருப்பூரில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூரில்,தேசிய கொடியின் இழுக்கை போக்கிட கொடியினை கையில் ஏந்தியபடி, மண்டை உடைந்து உயிர் நீத்த திருப்பூர் குமரனின் மரணம் இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
இளமையின் இனிமையை பாதியளவு கூட அனுபவிக்காமல் தனது 28 வயதிலேயே நாட்டின் விடுதலைக்காக தன் உயிரையே விலையாக கொடுத்திருந்த திருப்பூர் குமரன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், நாச்சிமுத்து-கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாக 1904-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி பிறந்தார்.
குமாரசாமி என்ற இயற்பெயரை கொண்ட அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக்கொண்டு நெசவு தொழிலை செய்து வந்தார். தனது 19-வது வயதில் ராமாயி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு 6 ஆண்டு காலம் திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை.
நெசவு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் குமரன் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறினார். இளம்பருவம் முதலே நாட்டுப்பற்று மிக்கவராக திகழ்ந்த அவர், காந்திய கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
இந்திய சுதந்திரத்திற்காக திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் பங்கேற்ற குமரன், பல போராட்டங்களுக்கு தலைமை ஏற்றும் நடத்தினார். 1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது.
அச்சமயம் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் திருப்பூரில் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாக பங்குகொண்டிருந்தார் குமரன். 1932-ம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமை ஏற்று ஆர்வமுடன் அணிவகுத்து சென்றார் திருப்பூர் குமரன். தடையை மீறி ஊர்வலம் சென்ற போது காவலர்கள் தடியடி நடத்தினர்.
இளைஞர் கூட்டம் வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!! என்ற முழக்கங்களை எழுப்பி முன்னோக்கி சென்றது. அப்போது காவலர்களால் தாக்கப்பட்டு, தடியடிபட்டு மண்டை பிளந்து வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!! என்று வீர முழக்கமிட்டு கீழே சரிந்து விழுந்தார் குமரன்.
வீதியெங்கும் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. உயிருக்கு போராடிய அந்த நிலையிலும் கரத்தில் பற்றியிருந்த தேசியக்கொடியை அவரது விரல்கள் பற்றியே இருந்தன. அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரன் மறுநாளான ஜனவரி 11-ந்தேதி அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயிரை கொடுத்து தேசிய கொடியை காத்ததால் அவர் கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டார். குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்து வந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில், 'திருப்பூர் குமரன் நினைவகம்' ஒன்றை அமைத்துள்ளது. இங்கு நூலகம், படிப்பகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
குமரனின் 100-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலையை இந்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது.
திருப்பூர் குமரன் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட கடந்த 2015-ல் தமிழக அரசு அறிவித்தது.அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா திருப்பூர் ரெயில் நிலையம் முன் அமைந்துள்ள அவரது நினைவகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளை 118-வது பிறந்தநாளையொட்டி அங்குள்ள குமரன் சிலைக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், தியாகி திருப்பூர் குமரன் அறக்கட்டளை, சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தியும், பொதுமக்கள் மாவிளக்கு ஏந்தியும் குமரன் ரோட்டில் ஊர்வலமாக சென்று திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் எதிரேயுள்ள குமரன் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு குமரன் பெயரை வைக்ககோரி பல ஆண்டுகளாக இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பூர் குமரனின் பிறந்தநாள்-நினைவுநாள் அன்று போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அதேப்போல நாளை சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.