அவனியாபுரம்:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சரியாக செயல்படவில்லை. சி.டி. ஆதாரத்தை வைத்து ஆட்சியை கலைக்க சொல்வது சரியல்ல. இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. திராவிட கட்சிகள் ஒன்றை ஒன்று குறைகூறி வருகின்றன். இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்.
தலைநகர் சென்னை இன்று போதை நகராக மாறிவிட்டது. புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி எறியப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரையில் மோடி அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி கண்காட்சி நடைபெற்றது. இங்கு வைக்கப்பட்டு இருந்த பேனரில் பிரதமர் மோடியின் படம் கிழிக்கப்பட்டது.
பா.ஜனதா பிரமுகர் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவரது விருப்பம். வந்தால் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்யட்டும். தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சியாக தி.மு.க. இல்லை. பா.ஜனதா தான் இனி மாற்று கட்சியாக வரும். இன்னும் 3 மாதத்தில் இது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.