ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பொதுமக்கள் சார்பில் சி.சி.டி.வி. காமிரா பொருத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டு மாதா கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள 8 காமிராக்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து மதபோதகர் ராஜதேவன் மற்றும் ஊர் நாட்டாமைகள் அருள்சூசை, மரிய ஞானபால்ராஜ், ஜோதி, அந்தோணி ஆகியோர் தலைமையில் சி.சி.டி.வி. காமிராக்கள் ஊரில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்கள், கோவில்கள் மற்றும் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் நெட்டூர் கிராமத்திற்கு சென்று சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பொதுமக்களை பாராட்டினர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கூறுகையில்,‘நெட்டூர் கிராமத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.சி.டி.வி. காமிராக்கள் வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம். இதனை மீறி குற்றச்செயல்கள் நடந்தாலும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதனை அனைத்து கிராமத்தினரும் கடைபிடித்தால் மக்கள் நிம்மதியாக வாழலாம்’ என்றார்.