செய்திகள்

சி.பி.எஸ்.இ. வினாத்தாள்கள் கசிவு- போலீஸ் பிடியில் பள்ளி முதல்வர்

சி.பி.எஸ்.இ. வினாத்தாள் கசிவு விவகாரம் தொர்பாக பள்ளி முதல்வரை போலீசார் பிடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள். #cbse #CBSEPaperLeak

மாலை மலர்

புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொருளாதாரம், 10-ம் வகுப்பு கணித வினாத்தாள்கள் அவுட் ஆனது. இதில் பொருளாதாரம் வினாத்தாள் டெல்லியிலும், 10-ம் வகுப்பு வினாத்தாள் பீகாரிலும் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வினாத்தாள் டெல்லி அருகே உள்ள பவனாவில் இருக்கும் மதர்கசானி கான்வென்ட் பள்ளியில் இருந்து வெளியாகி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக டெல்லி கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மதர்கசானி பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் ரிசாப், ரோஹித் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தனியார் கோச்சிங் சென்டர் ஆசிரியர் தவ்ஹித்அகமது உசேன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்காணிக்க வேண்டிய சி.பி.எஸ்.இ. அதிகாரி கே.எஸ். ராணா கடமையில் இருந்து தவறியதாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறார்.

அவர்கள் அனைவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதார வினாத்தாள் எப்படி வெளியானது என்பது பற்றி முழு விவரங்களும் தெரியவந்துள்ளது.

பொதுவாக வினாத்தாள் ஒரு நாளைக்கு முன்பே சம்பந்தப்பட்ட மையப் பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்குள்ள வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வங்கியில் இருந்து வினாத்தாளை அதிகாரி எடுத்து குறிப்பிட்ட பள்ளி மையத்துக்கு செல்வார்.

பரீட்சை எழுத வேண்டிய மாணவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்ததும் பரீட்சை வினாத்தாள் பார்சல் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறைக்கும் அனுப்பப்படும். சி.பி.எஸ்.இ. அதிகாரி மேற்பார்வையில் பள்ளி முதல்வர் முன்னிலையில் பிரிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த பள்ளியில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வினாத்தாள் பார்சல் பிரிக்கப்பட்டுள்ளது. அதை கண்காணிக்க வேண்டிய சி.பி.எஸ்.இ. அதிகாரி கண்டு கொள்ளவில்லை.

பார்சல் பிரிக்கப்பட்டதும் வினாத்தாளை செல்போன் மூலம் படம் எடுத்து ஆசிரியர்கள் ரிசாப், ரோஹித் ஆகியோர் தனியார் கோச்சிங் சென்டர் ஆசிரியர் தவ்ஹித்அகமது உசேனுக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் 2 ஆசிரியர்களும், தங்கள் பள்ளியில் உள்ள பொருளாதார மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் வினாத்தாளை அனுப்பி இருக்கின்றனர்.

அந்த பள்ளி மாணவர்களை 2 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். வினாத்தாளை லீக்அவுட் செய்வதற்காகவே திட்டமிட்டு அவர்களை வரச்சொல்லி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தனியார் கோச்சிங் சென்டர் ஆசிரியர் தவ்ஹித்அகமது உசேன் தனது மாணவர்களுக்கு வினாத்தாள் விவரங்களை கூறி எப்படி விடை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார்.

அந்த மாணவர்கள் அருகில் உள்ள மற்றொரு தேர்வு மையத்திற்கு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். பஸ்சில் வைத்தே அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த முறைகேட்டில் பள்ளி முதல்வர் சம்பந்தப்பட்டிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த பள்ளியில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால் பொருளாதார தேர்வு நடந்த அன்று மட்டும் அவை வேலை செய்ய வில்லை. அதாவது கேமராவில் இருந்து கம்ப்யூட்டருக்கு வரும் பதிவு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

தேர்வு மையத்தில் நடக்கும் காட்சிகள் எதுவும் பதிவாகிவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே வினாத்தாள் கசிவுக்கு பள்ளி முதல்வரும் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தங்களது பிடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

அதில் அவர் இதில் சம்பந்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால் முறைப்படி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வை ஜூலை மாதம் நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து அதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதை விசாரித்த நீதிபதிகள் தேர்வு நடத்துவதாக இருந்தால் உடனடியாக தேர்வு நடத்த வேண்டும். அதை தாமதப்படுத்தி மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடக்கூடாது. இது சம்பந்தமாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். #cbse #CBSEPaperLeak