புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மார்ச் 5-ம் தேதி தொடங்கிய இந்த தேர்வின் கணக்குப்பதிவியல் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் அப்பாடத்தின் வினாத்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய டெல்லி கல்வித்துறை மந்திரி மனிஷ் சிசோடா, 'சி.பி.எஸ்.இ. வினாத்தாள்கள் தேர்விற்கு முன் சட்ட விரோதமாக வெளியாகி உள்ளன. அவை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வினாத்தாள் கணக்குப்பதிவியல் பாடத்தின் செட்-2 வினாத்தாள் என்பது தெரியவந்துள்ளது. அதனுடைய நகலானது வாட்ஸ்-ஆப்பின் மூலம் எனக்கு இன்று காலை வந்தது. இது நேற்று மாலை முதல் பகிரப்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து கல்வி செயலாளரிடம் கூறினேன். சோதனை செய்து பார்த்ததில் அந்த வினாத்தாள் கணக்குப்பதிவியல் செட்-2 வினாத்தாள் என்பதை அவர் உறுதி செய்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வினாத்தாளை கசிய விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது' என அவர் கூறினார்.
இந்த வினாத்தாள் டெல்லி ரோகினி பகுதியில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு ஒத்திவைக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. #QuestionPaperLeak #CBSE #Accountancy #tamilnews