செய்திகள்

சி.பி.எஸ்.இ. மதிப்பெண் குளறுபடி - விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடந்து இருக்கலாம்: டெல்லி ஐகோர்ட்டு கருத்து

மதிப்பெண் கூட்டலிலேயே இவ்வளவு தவறுகள் நடந்திருந்தால், விடைத்தாள் திருத்தத்தில் எவ்வளவு தவறு நடந்திருக்கும்?’ என டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவிதுள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகளில், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே ஒன்றிரண்டு பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த நிலையில், மறுகூட்டலில் 45 மதிப்பெண்கள்வரை அதிகமாக கிடைத்தது. இதன்மூலம், மதிப்பெண் கூட்டலில் குளறுபடி நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், விடைத்தாள் மறுதிருத்தம் செய்யும் முறையை சி.பி.எஸ்.இ. ரத்து செய்ததை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கு, டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதிப்பெண் குளறுபடி பற்றிய செய்தியை குறிப்பிட்ட நீதிபதிகள், ‘மதிப்பெண் கூட்டலிலேயே இவ்வளவு தவறுகள் நடந்திருந்தால், விடைத்தாள் திருத்தத்தில் எவ்வளவு தவறு நடந்திருக்கும்?’ என்று தெரிவித்தனர்.

அதற்கு சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வக்கீல், ‘மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தவறுகளை சி.பி.எஸ்.இ. கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21-ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது.