செய்திகள்

ரூ.12 ஆயிரம் கோடி மோசடி - ரிசர்வ் வங்கியின் 3 அதிகாரிகளிடம் சி.பி.ஐ விசாரணை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் 3 பேரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றது. #PNBScam

மாலை மலர்

மும்பை:

வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து, மேலும் சில தொழிலதிபர்கள் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ அதிகாரிகள் தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகளை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.

இவ்வளவு பெரிய மோசடியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தொடக்கம் முதலே கூறப்பட்டது. இந்நிலையில், மூன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இரண்டு அதிகாரிகள் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணையின் போது பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டை ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்விகளை சி.பி.ஐ அதிகாரிகள் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. #PNBScam #RBI #CBI