பாட்னா:
பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வேதுறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள மேற்கண்ட இரு ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தற்கு கைமாறாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பினாமி நிறுவனத்துக்கு 3 ஏக்கர் வீட்டுமனை லஞ்சமாக பெறப்பட்டதாக தெரியவந்தது.
இந்த விவகாரம் முடிந்த பின்னர் வேறொருவருக்கு சொந்தமாக இருந்த அந்த பினாமி நிறுவனம் லாலுவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பெயரில் மாற்றப்பட்டது. 2010-2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த பரிமாற்றங்கள் முடிவடைதற்குள் ரெயில்வே மந்திரி பதவியை லாலு ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் லாலு குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத்தின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்–மந்திரியுமான ரப்ரி தேவிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை அளித்திருந்தார்.
பாட்னாவில் உள்ள ரப்ரி தேவியின் வீட்டுக்கு சமீபத்தில் சென்ற சி.பி.ஐ. உயரதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது ரப்ரி தேவி, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவிடம் ரெயில்வே ஓட்டல் ஊழல் தொடர்பாக விசாரித்தனர்.
இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக லாலு, ரப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #tamilnews #lalu #cbi #IRCTCcase