செய்திகள்

சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்: தலைமறைவு குற்றவாளி சிக்கினான்

சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் மீது கடந்த 8-8-1993 அன்று தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த அலுவலகம் இடிந்து தரைமட்டமானது. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 18 பேர் மீது 8-6-1994 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் வெடி குண்டுகளை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை தந்து உதவியதாகவும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்ததாகவும் போலீசாரால்  குறிப்பிடப்பட்ட முஸ்தாக் அஹமது என்பவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

7-8-1995 அன்று சென்னையில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு (தடா) நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணையில் 431 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். 

விசாரணைக்கு இடையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜிஹாத் கமிட்டி நிறுவனரான பழனி பாபா கடந்த 28-1-1997 அன்று பொள்ளாச்சியில் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும், விசாரணை காவலின்போது மதுரையில் இருந்து தப்பியோடிய பாகிஸ்தான் உளவாளி என சந்தேகிக்கப்பட்ட இம்மாம் அலி என்பவன், பெங்களூரு நகரில் கடந்த 29-9-2002 அன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான். சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் விசாரணை முடிந்து கடந்த 2007-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது

போதிய ஆதாரம் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட அல் உம்மா நிறுவனர் எஸ்,ஏ,பாஷா உள்பட 4 பேரை நீதிமன்றம் விடுவித்தது. 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது, இவர்களில் மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முஸ்தாக் அஹமது என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். அவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான முஸ்தாக் அஹமது-வை சென்னை புறநகர் பகுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது செய்தனர். #tamilnews #rss #cbi