செய்திகள்

சி.பி.சி.ஐ.டி.க்கு மாறிய சிலை மோசடி வழக்கு - குற்றவாளிகளை தப்ப வைக்க சதித்திட்டம்

பழனி சிலை மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான சதித்திட்டம் என பல்வேறு அமைப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மாலை மலர்

பழனி:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் உள்ள மூலவர் சிலை போகர் என்னும் சித்தரால் நவபாஷாணம் மூலம் செய்யப்பட்டது ஆகும். இந்த சிலைக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூலவர் சிலைக்கு செய்யப்பட்ட அபிஷேகத்தால் சிலை சேதமடைந்து வருவதாக கூறப்பட்டது. மேலும் அந்த சிலையை பாதுகாக்கும் வகையில் மூலவர் சிலைக்கு முன்பு ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலையை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள், பக்தர்களின் வேண்டுகோளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பின்னர் மூலவர் சிலைக்கு முன்பு ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக வைக்கப்பட்ட சிலைக்கே அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே புதிதாக வைக்கப்பட்ட சிலை நிறம் மாறியது. அதையறிந்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிலையை அகற்ற வேண்டும், நவபாஷாண சிலைக்கே மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

அதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, நவபாஷாண சிலைக்கே மீண்டும் பூஜைகள், அபிஷேகங்கள் தொடங்கியது. ஐம்பொன் சிலை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக செய்யப்பட்ட சிலை ஆகமவிதிப்படி செய்யவில்லை என்றும், அது ஐம்பொன்னால் செய்யப்பட்டது தானா? என்ற சந்தேகம் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு புகார் வந்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய மேல்விசாரணையில் அந்த சிலையை செய்த முத்தையா ஸ்தபதி மோசடி செய்ததும், இதற்கு அப்போதைய கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா உதவியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கோவில் அதிகாரிகளிடம் சிலை குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இவ்வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பழனியில் இந்து முன்னணி, பக்தர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பக்தர் பேரவை நாகேந்திரன் கூறியதாவது:-

சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையாவையும், முன்னாள் கோவில் அதிகாரி கே.கே. ராஜாவையும் கைது செய்தனர். இச்செய்தி பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மேலும் பலர் இதில் சிக்குவார்கள் என்ற நிலையில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி இருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது. இது எங்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. அரசு குற்றவாளிகளை தப்பவிடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றார்.

இந்து முன்னணியைச் சேர்ந்த செந்தில் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றியுள்ளது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஐ.ஜி பொன்மாணிக்கவேல் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு மோசடி வழக்கை கண்டுபிடித்து மோசடி செய்தவர்களை சிறையில் அடைத்துள்ளார். ஆதாரம் இல்லாமல் அவர் அவர்களை கைது செய்தாரா? எல்லாத்திற்கும் ஆதாரம் இருந்ததால் தானே கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட முத்தையா கூறும்போது இதில் நான் மட்டும் இல்லை எனக்கு பின்னால் பெரும் புள்ளிகள் பலர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு அரசு மாற்றுவது குற்றவாளிகளை தப்பவிடுவதற்காகவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவபாசான சிலை பாதுகாப்புக் குழு தலைவர் விமலபாண்டியன் கூறியதாவது:- திருச்சியில் நடைபெற்ற ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் இது வரை கண்டிபிடிக்கவில்லை. இதேபோல பல வழக்குகள் சி.பி.சி.ஐடி போலீசார் கண்டு பிடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரி களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையான அதிகாரியான பொன்மாணிக்க வேலிடமிருந்து மாற்றி சி.பி.சி.ஐ.டியிடம் தருவது உள்நோக்கம் கொண்டதாகும் என்றார். #tamilnews