அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஐ.பி.எல். நடத்த வேண்டாம் என்பது எங்களுடைய நிலைப்பாடு. பிரதமர் வருகைக்கான கருப்புக்கொடி போராட்டத்தில் நாங்கள் ஈடுபடவில்லை. மற்ற போராட்டங்கள் எங்கள் சார்பில் தொடரும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதில் தவறு இல்லை. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்திருக்க வேண்டும். தற்போது ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்துவதாக சொல்லப்படுவது முன்னதாகவே செய்திருந்தால் தேவையற்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு இருக்கலாம். ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
சென்னையில் நடந்த கலவரத்துக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஐ,பி.எல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொல்வது தவறு. போராட்டத்தின்போது போலீசார் மிகவும் கடுமையாக நடந்தது தான் வன்முறைக்கு காரணம். மத்திய அரசு செயலால் தான் தமிழகத்தில் கருப்புக்கொடி போன்ற போராட்டங்களுக்கு தள்ளப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், அமீர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றாக நின்று போராடினால் தான் வெற்றி என்பதில்லை. தமிழக கட்சிகள் தனி தனியாக பலமான அழுத்தம் கொடுக்கும் வகையில் தான் போராடி வருகின்றன. தேவை ஏற்பட்டால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து நாங்களும் போராட தயாராக உள்ளோம்.
கர்நாடகாவில் உள்ள பா,ஜனதாவினர் காவிரி மேலாண்மை அமைக்க கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இங்குள்ள பா.ஜனதாவினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாநில நலனிற்காக ஏன் போராடவில்லை. தேர்தல் அரசியலை முன்வைத்து பா.ஜனதா செயல்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு மத்திய அரசு தான் காரணம். மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்,
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அ.தி.மு.க. நடத்திய உண்ணாவிரதம் போராட்டம் கபட நாடகம். கடந்த 6 மாதமாக நீதிமன்ற தடையால் இந்த ஆட்சி தப்பித்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடந்தால் ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம். எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழ்ந்து விடும்.