நாகர்கோவில்:
காவிரி நீர் பிரச்சினையில் தீர்வு காண காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் நடைபயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்சினைக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்றும் அவரது நடைபயணம் காவிரிக்காக அல்ல அரசியலுக்காகத்தான் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.
தி.மு.க.வின் கறுப்பு கொடி ஆர்ப்பார்ட்டம் பிரதமருக்கு எதிரானது அல்ல, தமிழர்களுக்கு எதிரானது. காவிரி விவகாரத்தில் பெங்களூருவை நோக்கி ஸ்டாலின் நடை பயணம் மேற்கொண்டிருந்தால் பாராட்டி இருப்பேன். காவிரி விவகாரத்தில் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தாது ஏன்? என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் மீது பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் குற்றச்சாட்டு ஏற்கக்கூடியது அல்ல.
மத்தியில் பாரதீயஜனதா அரசுதான் ஆட்சியில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இரு மாநில பிரச்சினையை அவர்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் தற்போது தமிழகத்தில் போராட்டங்கள் நடத்த அவசியம் ஏற்பட்டு இருக்காது.
கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பாரதீய ஜனதா மிகப்பெரிய நாடகம் நடத்துகிறது. அவர்களது நாடகத்தை மறைக்கவே தி.மு.க.வும், காங்கிரசும் நாடகமாடுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
தமிழகத்தில் இருந்து மந்திரியாக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் தான் காவிரி பிரச்சினையில் தீர்வு காண அவரது தலைமையிடம் எடுத்துக்கூற வேண்டும். அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக கருத்துக்களையும், பதில்களையும் கூறுவது சரியல்ல. தமிழர் என்ற முறையில் அவர் காவிரிக்காக குரல் கொடுக்க வேண்டும். எனவே காவிரி விவகாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் மீது குற்றம்சாட்ட பொன். ராதாகிருஷ்ணனுக்கு எந்த தகுதியும் கிடையாது.
தி.மு.க., காங்கிரஸ் போராட்டத்தின் நோக்கத்தை பாமர மக்கள் கூட புரிந்து கொண்டுள்ளனர். தமிழர்கள் தங்களுடைய உரிமையை பெறுவதற்காக போராடுகிறார்கள். அதனால் தான் இந்த போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு உள்ளது.பிரதமருக்கு தி.மு.க. கறுப்பு கொடி காட்டுவது தமிழர்களுக்கு எதிரானது அல்ல. தமிழர்களின் உரிமைக்காகத்தான் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கர்நாடக தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அங்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இருக்காது. 2 இடத்திலும் ஒரே கட்சி ஆட்சி அமையும் போது இந்த பிரச்சினையை தட்டிக்கழித்து விடுவார்கள்.
காவிரி பிரச்சினையில் தமிழக எம்.பி.கள் தங்கள் உரிமையை மீட்டு எடுக்க பாராளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களது நோக்கம் சரியானதாக இருக்கிறது.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு மீது தமிழக எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் எம்.பி.க்கள் அதை ஆதரிப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த திட்டம் பற்றி மக்களுக்கு விளக்க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #cauveryissue #vijayadharanimla