சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். காவிரி பிரச்சினை தீரும் வரை ஐ.பி.எல். போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்துவது ஆணவத்தின் உச்சம் என தெரிவித்தார். சென்னையில் நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியை நிறுத்த மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்திற்காக சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது. #CauveryMangementBoard #Velmurugan #IPL2018