செய்திகள்

திருவள்ளூர், திருநின்றவூர், பொன்னேரியில் ரெயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி திருவள்ளூர், திருநின்றவூர், பொன்னேரியில் தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காய்கறி மார்க்கெட் முழுவதும் மூடப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சி.வி.நாயுடு சாலை, ஜெ.என்.சாலை, மோதிலால் தெரு, ராஜாளி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.

பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடின. ஆனால் குறைந்த அளவு பயணிகளே பஸ்சில் சென்றனர்.

திருவள்ளூரில் இருந்து சென்னை மார்க்கமாக காளஹஸ்தி சென்ற அரசு பஸ்சை புதுசத்திரம் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சென்னை - திருவள்ளூர் புறநகர் ரெயில் மற்றும் திருப்பதியில் இருந்து சென்னை சென்ற கருடாத்ரி விரைவு ரெயிலை மறித்தனர்.

திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வேளச்சேரி மற்றும் திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற 3 மின்சார ரெயில் மற்றும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சுந்தரம் தலைமையில் சென்னையிருந்து கும்மிடிபூண்டி நோக்கி சென்ற ரெயிலை மறித்தும் தண்டவாளத்தில் படுத்தும் 500-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம் பஸ் நிலையத்தில் எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மூர்த்தி தலைமையிலும் தண்டலத்தில் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், கன்னிகை பேர் பஸ் நிறுத்தத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு தலைமையிலும் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், தண்டலம், வெங்கல், தாமரைப்பாக்கம், பூச்சி அத்திப்பேடு, வெள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் நடந்தது.

பூந்தமல்லி பஸ் நிலைய வாயிலை மறித்து முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது மாநகர பஸ்களை சிறைப்பிடித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் பூவை எம்.ஜெயக்குமார், நகர செயலாளர் ரவிக்குமார், முனுசாமி, பூவை சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நகரின் பிரதான சாலையான காந்தி சாலையில் உள்ள பட்டு சேலை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

பெரும்பாலான ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயங்கின. நகரின் இரு பெரும் காய்கறிச் சந்தையான ராஜாஜி மார்க்கெட் மற்றும் நேரு மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே சென்னை- தேசிய நெடுஞ்சாலையில் நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews