செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல்மின் நிலையம் 10-ந் தேதி முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல்மின் நிலையத்தை 10-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டமைப்பினர் தெரிவித்தனர். #CauveryManagementBoard

மாலை மலர்

சென்னை:

காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டமைப்பை சேர்ந்த தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பொதுச்செயலாளர் தனியரசு எம்.எல்.ஏ. உள்பட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டை மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சித்து இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் ஒத்துழையாமை இயக்கம் நடத்த இருக்கிறோம்.

அதாவது, தமிழகம் வரும் மத்திய மந்திரிகளுக்கு கருப்பு கொடி காட்டுவோம். அவர்கள் கலந்துகொள்ளும் விழாவில் நாங்கள் யாரும் பங்கேற்கமாட்டோம். வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த மறுப்பது, சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது, கட்டணம் செலுத்த மறுப்பது, சரக்கு சேவைவரி மற்றும் வருமான வரி செலுத்த மறுப்பது போன்றவைகள் ஒத்துழையாமை இயக்கத்தில் அடங்கும்.

அதேபோல், வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெய்வேலி அனல் மின் நிலையத்தையும், சுரங்கத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள், வணிகர்கள் ஏற்கனவே அறிவித்துள்ள போராட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.

எங்களுடைய இந்த போராட்டங்களுக்கும் அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மக்களும் பெருந்திரளாக இதில் பங்கேற்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்து இருக்கிறது. அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு நாங்கள் பயப்படமாட்டோம். தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

நீரில்லாமல் விவசாயிகள் செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு வேண்டுமா? என்று அவர்கள் யோசிக்க வேண்டும். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க வர இருக்கும் மாணவர்கள் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  #CauveryManagementBoard