செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பந்த் - தமிழகம் முழுவதும் பாமகவினர் ரெயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பா.ம.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #PMK #Bandh #CauveryIssue

மாலை மலர்

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம், தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம், நடிகர்-நடிகைகள் சார்பில் மவுன போராட்டம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பா.ம.க. தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பா.ம.க. தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க. தொண்டர்கள், பின்னர் உள்ளே சென்று ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் பெங்களூரு விரைவு ரயிலை மறித்து பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருவள்ளூர் பெரியக்குப்பம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியல் செய்தனர். #PMK #Bandh #CauveryIssue