செய்திகள்

கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூரில் இன்று கடையடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

கரூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் 34 வணிகர் சங்கங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாவட்டத்திற்குட்பட்ட குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 12 ஆயிரம் கடைகள் வரை அடைக்கப்பட்டன.

கரூரில் ஜவஹர் பஜார், கோவை ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக பஜார் பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்கள், மருந்துகடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இதேபோல் வியாபாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கரூர் மாவட்டத்தில் 2500 லாரிகள் இன்று இயக்கப்படவில்லை. சரக்குகளை கையாள முடியாததால் ஒரு நாளைக்கு ரூ.10 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, பொன்னமராவதி உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. புதுக்கோட்டையில் கீழராஜ வீதி, தெற்குராஜ வீதி, வெல்ல மண்டி தெரு, வடக்கு ராஜவீதி, பர்மியான் பஜார், காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பிருந்தாவனம், டி.வி.எஸ்.கார்னர், பஸ் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட நாகுடி, ஆவுடையார் கோவில், சுப்பிரமணியபுரம், ஆவணத்தான்கோட்டை, அத்தாணி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அறந்தாங்கி வாரச்சந்தை இன்று ரத்து செய்யப்பட்டது. தினசரி மார்க்கெட் இயங்கவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வணிகம் நடைபெறும் முக்கிய வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடையடைப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதன்படி ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. புதிய மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் டீக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூரிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. பஸ் நிலையம், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. #tamilnews