செய்திகள்

தஞ்சை கல்லணை கால்வாயில் இறங்கி கல்லூரி மாணவர்கள் போராட்டம் - 200 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சை கல்லணை கால்வாயில் இறங்கி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய 200 பேரை போலீசார் கைது செய்தனர். #CauveryMangementBoard

மாலை மலர்

தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், மற்றும் விவசாய சங்கத்தினர், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆங்காங்கே சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்களான தபால் நிலையம், எல்.ஐ.சி. அலுவலகம், வருமான வரி அலுவலகம் ஆகியவை முற்றுகையிடும் போராட்டமும் நடந்து வருகிறது.

இதற்கிடையே கல்லூரி மாணவர்கள் போராட்டம் தஞ்சையில் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் தஞ்சை ஆத்துப்பாலம் கல்லணை கால்வாயில் இறங்கி கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

ஆத்துப்பாலம் அருகே உள்ள ராஜராஜ சோழன் நடைப்பாதை வழியே சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘‘திமு..திமு’’ வென கல்லணை கால்வாயில் இறங்கினர். இதில் தஞ்சையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கைகளில் பதாகைகளுடன் கால்வாயில் இறங்கிய மாணவர்கள் கோ‌ஷமிட்டனர்.

அப்போது ‘‘ வேண்டும்... வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்... வேடிக்கை பார்க்கும் மத்திய-மாநில அரசுகளே.. விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுங்கள்’’ என்று கூறி கோ‌ஷமிட்டனர்.

கல்லணை கால்வாயில் மாணவர்கள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மாணவர்கள் தொடர்ந்து கோ‌ஷமிட்டப்படியே இருந்தனர். இதை யடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இந்த நிலையில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த இந்த போராட்டத்தில் மாணவர்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். #CauveryMangementBoard