காவிரி நடுவர் மன்றம் விதித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கின் மீதான இறுதி விசாரணையை 18-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கர்நாடக அரசின் சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் நேற்று 3-வது நாளாக தன்னுடைய வாதத்தை தொடர்ந்தார். அவர் கூறியதாவது:-
1974-ம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, 1924-ல் மைசூர்-மதராஸ் மாகாணங்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று சட்டசபையில் அறிவித்தார். இதனை 1994-ம் ஆண்டில் தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதியின் இந்த அறிக்கை குறித்து சட்டசபையில் எடுத்துச்சொன்னார்.
இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு கருணாநிதியின் அறிக்கையின் நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதற்கு இந்த அறிக்கை கிடைக்கவில்லை என்ற பதிலை தமிழக அரசு நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்தது. கர்நாடக அரசு இந்த பிரச்சினையை வைத்து தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே அரசியல் செய்ய விரும்பவில்லை. எனவே, தமிழக அரசு நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த பதிலை கர்நாடக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது.காவிரி நடுவர் மன்றம் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. ஒதுக்கியது. கர்நாடகாவுக்கு 450 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது என்று முன்வைத்தபோது அதுகுறித்து தமிழ்நாடு கேள்வி எதுவும் எழுப்பவில்லை.
கர்நாடக மாநிலம் கீழ்ப்படுகையில் உள்ள தமிழ்நாட்டுக்கு பிலிகுண்டுலுவில் இருந்து 192 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் விதித்த தீர்ப்பு தமிழ்நாட்டின் தேவையை கருதி எடுத்த முடிவு அல்ல. இது நியாயமான ஒதுக்கீடு அல்ல. காவிரி நடுவர் மன்றம் நியாயமான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் 132 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து இருக்கும்.
எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அனைத்து வகையிலும் கர்நாடகாவை வஞ்சிக்கும் செயலாகவே அமைந்துள்ளது. கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு திருத்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு பாலி நாரிமன் தன்னுடைய வாதத்தை நிறைவு செய்தார்.
அவரை தொடர்ந்து மூத்த வக்கீல் எஸ்.எஸ்.ஜாவளி, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது. நியாயத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் அமையாதது. எனவே, இந்த தீர்ப்பில் குறுக்கிடும் கடமை சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்றார்.