காவிரி நீர் குறைக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு, தற்போது 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும், காவிரி நீர் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளையும் இதுவரை மதிக்காத கர்நாடக மாநிலத் திற்கு, ஏற்கனவே வழங்கப்பட்டதை விட கூடுதலாக 14.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கிறது.
எனவே, புவியியல் மற்றும் சரித்திர ரீதியாக தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் போதிய அளவில் முன்வைக்கத் தவறிய அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க.வின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கருணாநிதி தமிழகத்திற்குப் பெற்றுத் தந்த உரிமைகளை, அ.தி.மு.க. அரசு இன்றைக்கு பறிகொடுத்து விட்டது. ஆகவே, தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டு, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைக்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி:-
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. வழங்க ஆணையிட்டதை மாற்றி, 177.25 டி.எம்.சி. நீராகக் குறைந்திருப்பது வருந்தத்தக்கதும், ஏமாற்றமளிக்கக் கூடியதாகும். ஏற்கனவே, காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை போன்ற பயிர்ச் சாகுபடிகள் சரிவர நடக்காமல் பாலைவனமாக அப்பகுதி மாறிடும் நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த அளவு நீரையாவது அளிக்க உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆளுங்கட்சி, உடனடியாக அனைத்துக் கட்சிகள், சமூக, விவசாய அமைப்பினரைக் கூட்டி, ஒன்றுபட்ட ஒருமித்த குரலில் நமது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது.
காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப் பெரிய அநீதி. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. 1924-ம் ஆண்டில் தமிழகத்தின் பங்கு 575.68 டி.எம்.சி.யாக இருந்தது.
இப்போது 404 டி.எம்.சி. யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும். உழவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஊழலைப் பற்றி கவலைப்படும் ஆட்சியில் இதைத் தவிர வேறு என்ன நடக்கும்? ஆடு கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்ற அவலமாகி விட்டது உழவர்களின் நிலை.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது. நதி நீரில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
நிலத்தடி நீர்மட்டத்தை நடுவர்மன்றம் கணக்கில் எடுக்கவில்லை என்று சுட்டிக் காட்டி 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து அதில் 4.75 டி.எம்.சி. தண்ணீரை பெங்களூர் குடிநீருக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
குறிப்பிட்டுள்ள தண்ணீரையாவது காவிரி பாசனப்பகுதியின் இருபோக சாகுபடிக்கும் மாதா மாதம் தரவேண்டும். பற்றாக்குறை காலங்களில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை மேலாண்மை வாரியம் முறையாக, வழங்கவும் யாரும் மீறாத வகையிலும் கண்டிப்பான வழி முறைகளை உருவாக்க வேண்டும்.
பா.ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:-
தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீர் குறைக்கப்பட்டு தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஏற்கனவே கடந்த முறை அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய தீர்ப்பின்படி தண்ணீரை முழுமையாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
தமிழக உரிமைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. தமிழக உரிமைகள் பாதிக்கப்படுவதற்கும், விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளே காரணம்.
நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்ததில் 14.75 டி.எம்.சி.ஐ குறைத்து உத்தரவிட்டு இருப்பதற்கு காரணமாக நிலத்தடி நீர் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
இது தமிழக விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல் இருந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு கர்நாடகம் கொடுக்கும் தண்ணீரை தடங்கல் இல்லாமல் உரிய நேரத்தில் குறைவில்லாமல் வழங்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-
தமிழகத்தில் காவிரி நீரை படிப்படியாக குறைத்து இப்போது மேலும் 15 டி.எம்.சி. நீரை குறைத்து இருப்பது தமிழக மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் 20 அடி இருப்பதாக காரணம் காட்டி குறைத்து இருக்கிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் நிரந்தரமல்ல. மழையின் அளவை பொறுத்து மாறும்.
காவிரி பிரச்சினையில் இன்று சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைப்பு தமிழகத்துக்கு பின்னடைவு தான்.
இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
‘நதிகள் தேசியச் சொத்து’ என்ற அடிப்படையில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் 14.75 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகாவுக்குக் கூடுதலாகத் தரவேண்டும் என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-
இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக அமைந்துள்ளது. காவிரி நீர் எந்த மாநிலத்திற்கும் சொந்தம் கிடையாது என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.
கர்நாடக அரசு இனிமேல் புதிதாக அணை கட்ட முடியாது என்ற உத்தரவும் வரவேற்கத்தக்கது. காவிரி நதிநீரை நம்பி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு காவிரி நீர் குறைக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றமும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
தீர்ப்பு தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட அநீதியாகும்.
இத்தீர்ப்பிற்கு பின்னர் யாரும் மேல் முறையீட்டிற்கு செல்ல முடியாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது தமிழகத்திற்கு எதிராக ஒரு நிலைப் பாடாகும். ஏனென்றால் தமிழகம்தான் மேல் முறையீடு செய்வதற்கான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் மத்திய அரசு அவ்வாறு செய்யுமா, என்பது கேள்விக்குறியாக உள்ளது.