வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது ஆண்டியார்கிராமம். இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சவுக்கு தோப்பு உள்ளது. அந்த சவுக்கு தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெட்டி கொலைசெய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் சவுக்கு தோப்பில் வாலிபர் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இதுகுறித்து வானூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங் கோவன், இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சவுக்கு தோப்பில் பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டனர்.
அந்த வாலிபர் பேண்ட், சட்டை அணிந்திருந்தார். அவர் புதுவையை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதுகிறார்கள்.
மர்ம நபர்கள் யாரேனும் அவரை கள்ளக்காதல் தகராறில் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபரின் பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறனர்.
சவுக்கு தோப்பில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.