இந்திய கரன்சி 
செய்திகள்

குமரி மாவட்டத்தில் நடமாடும் ஏடிஎம் போன்று தபால்காரர் மூலம் பண பரிவர்த்தனை

குமரி மாவட்டத்தில் நடமாடும் ஏ.டி.எம். போன்று தபால்காரர் மூலமாக பண பரிவர்த்தனை செய்யப்படும் என்று கன்னியாகுமரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தபால் துறையில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பணத் தேவைக்காக மக்கள் வெகுதூரம் அலையவோ அல்லது காத்திருக்கவோ வேண்டாம். நடமாடும் ஏ.டி.எம். போல தபால்காரர் மக்களை தேடி வந்து பணம் வழங்குவார். ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்கில் இருந்து தபால்காரர் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த சேவையை பெற ஆதார் எண் மற்றும் செல்போன் எண் மட்டும் போதும். இந்த திட்டம் மூலம் உங்களது பணம் பாதுகாப்பாக உங்களை வந்தடையும். இந்த சேவையை நகர்ப்புறம், கிராமப்புறங்களில் தபால்காரர்கள் மூலமும் பெற முடியும். முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்கள், 100 நாள் வேலைக்கு செல்வோர், கியாஸ் மானியம் பெறுவோர், மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவோர் என பலதரப்பட்டவர்கள் இதன் மூலம் பயனடைவர்.

இதற்காக தபால் நிலையங்களுக்கு சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கினை தொடங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியையும் எளிதாக வீட்டில் இருந்தபடியே பெறமுடியும். இந்த சேவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை இல்லை.

இந்த வசதியை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக 11-ந் தேதி (இன்று) முதல் 15-ந் தேதி வரை கன்னியாகுமரி கோட்டத்தில் ஏ.இ.பி.எஸ். பரிவர்த்தனை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். அல்லது 04652 230493 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.