சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. 
செய்திகள்

அரசு நிலத்தை அபகரித்ததாக வழக்கு: மா.சுப்பிரமணியன், மனைவியுடன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் மா.சுப்பிரமணியன், மனைவியுடன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

மாலை மலர்

சென்னை:

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரான மா.சுப்பிரமணியன் கடந்த சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது வீடு அபகரிப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த மே மாதம் 31-ந்தேதி கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து தனது மனைவி காஞ்சனா பெயரில் மாற்றிக் கொண்டதாக கூறியிருந்தார்.

ஆனால் சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் இந்த நிலம் தொடர்பாக பொய்யான தகவலை கூறி இருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக பார்த்திபன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இதுபற்றி கிண்டி போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மா.சுப்பிரமணியன். அவரது மனைவி காஞ்சனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனை ஏற்று இன்று 2 பேரும் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார்கள். காலை 10.50 மணி அளவில் மா.சுப்பிரமணியனும், 11 மணி அளவில் அவரது மனைவி காஞ்சனாவும் தனித்தனியாக காரில் வந்து இறங்கி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்றனர்.

2 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நில அபகரிப்பு தொடர்பாக மா.சுப்பிரமணியன், காஞ்சனா இருவரிடமும் விசாரணை நடத்திய போலீசார் அதனை வாக்கு மூலமாக பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மா.சுப்பிர மணியனும், காஞ்சனாவும் முன்ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.