செய்திகள்

ஜெ.தீபா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

முட்டை வியாபாரி கூறும் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்தால், ஜெ.தீபா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் பதவி வகித்தேன். அப்போது கட்சி அலுவலகச் செலவு மற்றும் குடும்பச் செலவுக்காக ஜெ.தீபாவும், அவரது கார் டிரைவர் ஏ.வி.ராஜாவும் என்னிடம் பணம் வாங்கினார்கள். கடந்த 2017 பிப்ரவரி முதல் பல்வேறு தேதிகளில் ரூ.1 கோடியே 12 லட்சம் பெற்றனர்.

எனக்கு கட்சியில் முக்கிய பதவியும், எதிர்காலத்தில் அமைச்சர் பதவியும் தருவதாக கூறினார்கள். அவர்கள் என்னை ஏமாற்றுகின்றனர் என தெரிந்ததும், வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாக ஜனவரி 11-ந்தேதி போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். ஆனால், அரசியல் காரணத்துக்காக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, என் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஏற்கனவே விசாரித்தார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், ஜெ.தீபா, ஏ.வி.ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews